
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், நெதர்லாந்தை பேட்டிங் செய்யவும் அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ் ஓடவுட் 28 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் இணைந்த மைக்கேல் லெவிட் - கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய லெவிட் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மைக்கேல் லெவிட் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 68 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய சாக் லயன் கேஷட், கைல் கெலின் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 81 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் ஷால்விக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.