
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கனடா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் மற்றும் ராயன் பதான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 14 ரன்களை எடுத்திருந்த ராயன் பதான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் கிர்டனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஆரோன் ஜான்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேப்டன் நிக்கோலஸ் கிர்டனும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.