
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களையும், கேன் வில்லியம்சன் 118 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல அவுட்டானது. இதையடுத்து 349 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் அபாரமான சதத்தின் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 179 ரன்களைச் சேர்த்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 528 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
இந்நிலையில் இன்று தோடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி தொடர்வதற்கு பதிலாக 179 ரன்களில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 529 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் எட்வர்ட் மூரெ ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் நெய்ல் பிராண்ட் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.