
சமீபகாலங்களில் டி20 கிரிக்கெட் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்களும் உலகளவில் நடைபெறும் டி20 பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் விளையாட அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. முன்பெல்லாம் வீரர்கள் தங்களுக்கு எந்தவொரு சர்வதேச போட்டிகளும் இல்லாத சமயத்தில் தான் இதுபோன்ற டி20 பிரான்சைஸ் லீக் தொடரில் விளையாடி வந்தனர்.
ஆனால் சமீப காலங்களில் பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் அதிக பணம் ஈட்டமுடியும் என்ற காரணத்தால் பெரும்பாலான வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்காக விளையாடாமல் லீக் போட்டிகளில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்தவகையில் நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் டிரென்ட் போல்ட் அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதுடன், தேவைப்படும் நேரங்களில் மட்டும் தேசிய அணிக்காக விளையாடிவிட்டு, மீதமிருக்கும் நேரங்களில் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
மேற்கொண்டு நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் படுதோல்விக்கு பிறகு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன், தனது ஓபந்தத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் அவர்களது வரிசையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே, ஃபின் ஆலனும் இணைந்துள்ளனர்.