டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று சூப்பர்-12 சுற்று தொடங்கியது. இதில் இன்று போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துடன் மோதியது. இப்போடியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன், டேவன் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. ஃபின் ஆலன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கான்வே அரை சதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் வில்லியம்சன் 23 ரன், கிளென் பிலிப்ஸ் 12 ரன் சேர்த்தனர்.
அதன்பின்னர் கான்வேயுடன் நீஷம் இணைய, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார்.