
இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது சமீபத்தில் முடிவடைந்தது.
அதன்படி இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது மார்ச் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாகவே நியூசிலாந்து அணியைச் சேர்ந்த சில வீராங்கனைகள் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதன்படி விக்கெட் கீப்பர்-பேட்டர் இஸி கேஸ், வேகப்பந்து வீச்சாளர் ஹேலி ஜென்சன் மற்றும் பேட்டர் பெல்லா ஜேம்ஸ் ஆகியோர் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இதில் இஸி கேஸ் இலங்கை ஒருநாள் தொடரின் போது காயத்தை சந்தித்தார்.