
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் குரூப் 1இல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்திடம் அடி பணிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் இங்கிலாந்து களம் காணுகிறது.