
இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, விராட் கோலி ஆகியவருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் ரோகித் சர்மாவும் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு அமையப்போகும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் எழுந்துள்ளது.
அதே வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த பிறகு ஒரு மிகப்பெரிய சரிவிற்கு பின்னர் மீண்டும் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல அணியாக திகழ்ந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.