
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் டேவிட் மில்லர், குயின்டன் டி காக், காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜேசன் ஸ்மித் மற்றும் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் அசத்திய குவேனா மபாகா உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர், பிராண்டன் கிங் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரோவ்மன் பாவெல் தலைமையிலான இந்த அணியில் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஜான்சன் சார்லஸ் என நட்சத்திர வீரர்களுக்கு அணியின் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.