
கடந்த மே மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கீரேன் பொல்லார்ட் விலகினார்.இதனைத் தொடர்ந்து ஒருநாள், டி20 அணிக்கு நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தலா 15 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிராக படுமோசமாக சொதப்பி தோற்று, லீக் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இந்த மாபெரும் வரலாற்று தோல்விகள் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள், டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து நிகோலஸ் பூரன் நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய பூரன், “என்னை நம்பிதான் கேப்டன் பதவி கொடுத்தார்கள். சிறப்பாக செயல்பட முடியும் என என்மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஆனால், டி20 உலகக் கோப்பையில் சொதப்பி, சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாதது நிச்சயம் எனது கேப்டன்ஸிக்கும், அணிக்கும் பெரும் பின்னடைவுதான். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டேன். உண்மையாக உழைத்தேன். கேப்டன் பதவி வழங்கிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. அணியின் நலனுக்காகத்தான் என்னை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்” எனக் கூறினார்.