
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்று விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சௌமியா சர்க்கார் - கேப்டன் நஜ்முல் ஹொசைன் சண்டோ இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பொறுப்பாக விளையாடி வந்த சௌமியா சர்க்கார் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 68 ரன்களில் சௌமியா சர்காரும், மஹ்முதுல்லா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை ஓரளவு தாக்குபிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் முஷ்ஃபிக்கூர் 25 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் 12 ரன்களுக்கும், தன்ஸிம் ஹசன் 18 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.