
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியானது ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்கள் குவித்து அசத்தியது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 95 ரன்கள், சஞ்சு சாம்சன் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளென் பிலிப்ஸ் மற்றும் அப்துல் சமாத் ஆகியோரது அதிரடி காரணமாக சன் ரைசர்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றது.