அஸ்வின், ஷமி பிளேயிங் லெவனின் இடம்பிடிப்பார்களா? - பராஸ் மாம்ப்ரே பதில்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் இடம்பிடிப்பார்களாக என்ற கேள்விக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பதிலளித்துள்ளார்.
இந்திய அணி நாளை வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இதுவரை நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே சமயத்தில் அவருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேபோல் அஹ்மதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியில், அந்த மைதானத்தை சொந்தமாக கொண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடும் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட இந்த இருவருக்குமே வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்திய அணியின் எட்டாவது இடத்தில் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் கடைசி இரண்டு போட்டிகளிலும் இடம் பெற்று விளையாடுகிறார்.
Trending
இந்த நிலையில் நாளைய போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பை இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே சந்தித்தார். அவரிடம் அஸ்வின் மற்றும் முகமது ஷமிக்கான வாய்ப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மாம்ப்ரே, “உங்களுடைய பதினைந்து பேர் கொண்ட அணியில் உலகத்தரமான ஒரு பந்துவீச்சாளரை விளையாடாமல் வைத்திருப்பது மிகவும் கடினமான ஒரு முடிவு. ஆனால் நீங்கள் அணிக்காக இத்தகைய முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். நாங்கள் எப்பொழுதும் அணிக்கு என்ன தேவையோ அது குறித்து மட்டுமே விவாதிக்கிறோம்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக ஆடுகளம் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி மட்டுமே அணியை தேர்ந்தெடுத்து வருகிறோம். அப்படியான அணி கலவையுடன் தொடர்ந்து விளையாடுகிறோம். அஸ்வினைப் பொறுத்தவரை அவர் சிறந்த அணிக்கான வீரர். அவர் எரிச்சலுடன் செயல்பட்டு நான் எப்பொழுதும் பார்த்தது கிடையாது. அவர் எங்களுடன் இருந்து எங்களுக்கு உதவுகிறார். இந்த பெருமை அவருக்கே சேரும்.
பல வருடங்களுக்குப் பிறகும் அவர் அணியில் தொடர்ந்து வருகிறார். ஒவ்வொரு பயிற்சி அமர்விலும் கடுமையாக உழைக்கிறார். அணிக்காக எப்பொழுதும் சிறப்பாக செயல்பட விரும்புகிறார். அவர் ஒரு சிறந்த அணி வீரர். ஷமி குறித்து முடிவெடுப்பது நேர்மையாக எளிதான காரியம் கிடையாது. நாங்கள் அவருடன் தெளிவான உரையாடலை நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறேன்.
நாங்கள் ஆடுகளத்திற்கு ஏற்ப சரியான அணியை தேர்ந்தெடுக்கிறோம். சில நேரங்களில் அவரைப் போன்ற ஒருவரை தவற விடுகிறோம். இது மிகவும் கடினமானது. ஆனால் நம்மால் 11 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்” என்று விளக்கமளித்துள்ளார். இதனால் நாளைய போட்டியிலும் அஸ்வின் மற்றும் ஷமி விளையாடுவார்களா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now