
பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பிறகு, இங்கிலாந்து அணி 50 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இரண்டாவது இன்னிங்களில் இந்த முன்னிலையை உடைத்து 3ஆம் நாள் ஆட்டத்தை விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, உணவு இடைவெளியின்போது மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி, 3ஆவது டெஸ்டுக்கு முன்பாக, இதுதான் தனது கடைசி டெஸ்ட் போட்டி. இது முடிந்த பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முதல் இன்னிங்சில் 45 ரன்கள் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஜாக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார்.
அசார் அலி ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இங்கிலாந்து வீரர்கள் ஒருவர் பின் மற்றொருவராக அவரிடம் ஓடிவந்து கைகுலுக்கி உரிய மரியாதையையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். உணர்வுப்பூர்வமாக கண்ணீருடன் வெளியே நடந்து சென்ற அசார் அலிக்கு பாகிஸ்தான் வீரர்களும் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். இத்தகைய மரியாதைக்கு அசார் அலி மிகவும் தகுதியான வீரரும் கூட.