
அடுத்த மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2022 தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் பந்து வீச்சில் சொதப்பியதுதான் எனக் கூறப்படுகிறது. இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, உறுதியான பிளேயிங் லெவன் அணி இல்லாததுதான்.
இப்படி உறுதியான பிளேயிங் லெவன் அணி இல்லாததற்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர்தான். ஒரு இடத்திற்கு இரண்டு பேரும் போட்டி போடுகின்றனர். இருவரும் திறமையானவர்கள். இதனால், ஒவ்வொரு போட்டியிலும் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலை ஆசியக் கோப்பையில் இருந்தது. இப்படி உறுதியான பிளேயிங் லெவல் அணி இல்லாதது, அணி முழுமையாக தயாராக இல்லை என்பதையும் வெளிகாட்டியது.
இதனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பிளேயிங் லெவன் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.