
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 09-ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இத்தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை இந்த இளம் அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். இதில் துவக்க வீரரான ராகுல் காயம் காரணமாக வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அதே வேளையில் சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இது ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம்.
ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேவேளையில் இஷான் கிஷன் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.