
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அந்த வகையில் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் காகிசோ ரபாடா, மிட்செல் சாண்ட்னர் மற்றும் நோவ்மன் அலி ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதை வென்றதன் மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
மேற்கொண்டு நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இதுதவிர்த்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோவ்மன் அலி 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.