
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத் சிறப்பு சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் நூர் அஹ்மத் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நூர் அஹ்மத் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஒரு சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்தனர்.