
அஹ்மதாபாத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை சேர்த்து அசத்தியது.
இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 89 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 6 பவுண்டரிகளை விளாசி 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ராகுல் திவேத்தியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான் ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் - பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.