
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தியதுடன், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். இந்நிலையில் தனது குழந்தை பிறப்பின் காரணமாக இத்தொடரில் இருந்து விலகி இருக்கும் பாட் கம்மின்ஸ் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது கம்மின்ஸ் காயத்தை சந்தித்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.