விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து கம்பீர், இன்சமாம் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இழந்த தனது ஃபார்மை மெதுவாக மீட்டு வருவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர், இன்சமாம்-உல்-ஹாக் கூறிய கருத்துகளைப் பார்ப்போம்.
சர்வதேச கிரிக்கெட் களத்தின் ரன் மெஷின் என அறியப்படுகிறார் விராட் கோலி. மூன்று ஃபார்மேட்டிலும் இவரது ரன் வேட்டை தொடர்ந்து வந்தது. இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக இவரது ஆட்டம் மங்கியது. அவர் எப்போது சதம் பதிவு செய்வார் என்ற கேள்வி எழுந்தது. அண்மையில் அவரது ஆட்டம் குறித்து நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் வந்தன.
இந்தச் சூழலில்தான் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் 35 மற்றும் 59* ரன்களை சேர்த்துள்ளார். இதில் முதல் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Trending
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக், “இந்த இரண்டு போட்டிகளிலும் அவர் ஆடிய விதம் என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் கம்பேக் கொடுப்பதில் உறுதியாக உள்ளார். அவர் தனது கடினமான கட்டத்தில் இருந்து மீண்டு வருவது இந்திய அணிக்கும் நல்ல காலம். உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவர் ரன் சேர்க்க வேண்டும் மற்றும் ஃபார்மை தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் எல்லா வீரர்களும் இதை கடந்து வந்துள்ளார்கள். மீண்டும் ஃபார்முக்கு திரும்ப அவர்களுக்கு ஒரு தொடரோ அல்லது ஒரு மாத காலமோ போதும்” என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் கூறியுள்ளார்.
விராட் கோலி குறித்து கம்பீர் கூறுகையில், “ஆசிய கோப்பையில் கிடைத்துள்ள நல்ல தொடக்கத்தின் மூலம் கோலிக்கு தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும் என நம்புகிறேன். என்னதான் விடாமல் வலைப் பயிற்சி செய்தாலும் களத்தில் போட்டியின்போது ரன் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நம்பிக்கை வேறு விதமானது. இங்கு யார் எதிரணி? அவர் எடுத்துள்ள ரன்கள் மற்றும் களத்தில் செலவிட்டுள்ள நேரம் முக்கியமானது. வரும் நாட்களில் அவரது தரமான ஆட்டத்தை நம்மால் பார்க்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now