
டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
டி20 கேப்டன் பதவி விலகிய பிறகு கோலி கூறியதாவது: இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் விவாதித்த பிறகே இம்முடிவை எடுத்தேன். கங்குலி, ஜெய் ஷா, தேர்வுக்குழுவினர் ஆகியோரிடமும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்றார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒருநாள் அணிக்குத் தலைமை தாங்க தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் டிசம்பர் மாதம் காட்சிகள் எல்லாம் மாறின.
கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது.