
உலகின் பல்வேறு நாடுகளும் பிரான்சைஸ் லீக் டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. அந்தவகையில் வங்கதேச கிரிக்கெட் வாரியமும் பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இதில் நடப்பு சீசனானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ராங்பூர் ரைடர்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் பாரிஷால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற ராங்பூர் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஃபார்ச்சூன் அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்ஹை அமைத்து கொடுத்தனர். இதில் தமிம் இக்பால் 40 ரன்களுக்கும், சாண்டோ 41 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக தாவ்ஹித் ஹிரிடோய் 23 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 20 ரன்களையும் எடுத்தனர். இதன்மூலம் ஃபார்ச்சூன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை சேர்த்தது.