
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி காட்டியதன் மூலம் முதல் 6 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 68 ரன்களை குவித்தது. இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபின் ஆலன் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் டெவான் கான்வேவுடன் இணைந்த ரச்சின் ரவீந்திராவும் அதிரடி காட்டினார். தொடர்ந்து இருவரும் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் டெவான் கான்வே தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் அபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 29 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.