
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க தவறியது. இதனால் முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ண்டு 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேமரூன் க்ரீன் 25 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்குய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மார்னஸ் லபுஷாக்னே 45 ரன்களுடனும், நாதன் லையன் ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் நாதன் லையன் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.