
இங்கிலந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 347 ரன்களைக் குவித்த நிலையில், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது 143 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 202 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் கேன் வில்லியம்சனின் சதத்தின் மூலம் 453 ரன்களைக் குவித்ததுடன், இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் என்ற இலக்கையும் நிர்ணயித்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி மீண்டும் நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தர். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.