NZ vs ENG, 2nd Test: வில்லியம்சன் சதம்; இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 48 ரன்களை எடுத்து இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என இங்கிலாந்து அணீ தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாக் க்ராவ்லி(2), பென் டக்கெட் (9) ஆலி போப்(10) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 21 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஹாரி ப்ரூக்கும் ஜோ ரூட்டும் இணைந்து அபாரமாக பேட்டிங் விளையாடி இருவருமே சதமடித்தனர். அதிரடியாக ஆடி சதமடித்த ஹாரி ப்ரூக் 176 பந்தில் 186 ரன்களையும், ரூட் 153 ரன்களையும் குவிக்க முதல் இன்னிங்ஸில் 435 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. டெவான் கான்வே(0), கேன் வில்லியம்சன்(4), வில் யங்(2) ஆகியோர் படுமோசமாக ஆடி ஆட்டமிழந்தனர். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய தொடக்க வீரர் டாம் லேதமும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹென்ரி நிகோல்ஸ் 30 ரன்களுக்கும், டேரைல் மிட்செல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 103 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் ஆடிய கேப்டன் டிம் சௌதி அரைசதம் அடித்து 73 ரன்களை விளாச, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.
முதல் இன்னிங்ஸில் முடிவில் ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 2ஆவது இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர்கள் சுதாரிப்புடன் பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 149 ரன்களை குவித்தனர். கான்வே 61 ரன்களுக்கும், டாம் லேதம் 83 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். வில் யங் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் கேன் வில்லியம்சனும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து பேட்டிங் ஆடிவருகின்றனர்.
இதனால் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 25 ரன்களுடனும், ஹென்ரி நிகோல்ஸ் 18 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அபாரமாக விளையாடிய கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தினார்.
அதேசமயம் மறுமுனையில் ஹென்றி நிக்கோலஸ் 29 ரன்களிலும், டேரில் மிட்செல் 54 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, 132 ரன்கள் எடுத்திருந்த கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டாம் பிளெண்ட்ல் அதிரடியாக விளையாடிய 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 483 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வழக்கம் போல் ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஸாக் கிரௌலி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் நாம்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களைச் சேர்த்ததுள்ளது. இதில் பென் டக்கெட் 23 ரன்களுடனும், ஒல்லி ராபின்சன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now