NZ vs IND, 2nd T20I: இரண்டாவது சதத்தை பதிவுசெய்த சூர்யகுமார்; ஹாட்ரிக் வீழ்த்திய சௌதீ!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது.இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் அபாரமாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அடுத்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.இத்தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி பே ஓவலில் இன்று தொடங்கியது.
Trending
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்து, இந்திய அணியைப் பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - ரிஷப் பந்த் இணை களமிறங்கினர். தொடக்கத்திலேயே இந்த இணை எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அதன்பின் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்து தனக்கான வாய்ப்பை வீணடித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 31 பந்துகளில் 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். அத்துடன் நிறுத்தாமால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 51 பந்துகளில் 7 சிக்சர், 11 பவுண்டரிகள் என 111 ரன்களை குவித்தார்.
அதன்பின் கடைசி ஓவரில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அந்த ஓவரை வீசிய டிம் சௌதீ சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now