
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (மார்ச் 29) தொடங்கியது. அதன்படி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் வில் யங், நிக் கெல்லி மற்றும் ஹென்றி நிக்கோலஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மார்க் சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டேரில் மிட்செலும் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை எட்டியது.