
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கெப்டன் ஷாஹின் அஃப்ரிடி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் பாகிஸ்தான் பந்துவீச்சில் பிரித்துமேய்ந்தார்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வில்லியம்சன்னுடன் இணைந்த டேரில் மிட்செலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.