
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி கள்மிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரைஸ் மாரியூ மற்றும் நிக் கெல்லி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிக் கெல்லி 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த மாரியூ - ஹென்றி நிக்கோலஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மாரியூ தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் ஹென்றி நிக்கோலஸ் 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 58 ரன்களைச் சேர்த்த கையோடு ரைஸ் மாரியூவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் டேரில் மிட்செல் 43 ரன்களுக்கும், டிம் செஃபெர்ட் 26 ரன்களுக்கும், முகமது அப்பாஸ் 11 ரன்களுக்கும் என சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர்.