
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற 2-0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள ஓவல் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிய்யில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த் ஆலன் - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிக்சர் மழை பொழிந்த ஃபின் ஆலான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
அதனைத்தொடர்ந்து மறுபக்கம் இருந்த டிம் செய்ஃபெர்ட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செலும் 8 ரன்களோடு நடையைக் கட்டினார். இவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள், 16 சிக்சர்கள் என 137 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.