
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே ஒரு ரன்னிலும், டாம் லேதம் 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த கேன் வில்லியம்சன் - ரச்சின் ரவீந்திரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் கேன் வில்லியம்சன் தனது 30ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் ரச்சின் ரவீந்திராவும் தனது சதத்தைப் பதிவுசெய்திருந்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்தை கேன் வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கேன் வில்லியம்சன் 118 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் 34 ரன்களிலும், டாம் பிளெண்டல் 11 ரன்களிலும், கிளென் பிலீப்ஸ் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.