
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா இரட்டை சதமும், கேன் வில்லியம்சன் சதமும் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களையும், கேன் வில்லியம்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் நெய்ல் பிராண்ட் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் எட்வர்ட் மூர் - கேப்டன் நெய்ல் பிராண்ட் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் நெய்ல் பிராண்ட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரேனார்ட் வான் டோண்டர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து எர்ட்வர்ட் மூர் 23 ரன்களுக்கும், ஹம்ஸா 22 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.