
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் நெய்ல் பிரண்ட் - க்ளைட் ஃபோர்டுயின் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபோர்டுயின் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து நெய்ல் பிரண்ட் 25 ரன்களுக்கும், டொண்டர் 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஸுபைர் ஹம்ஸா 20, கீகன் பீட்டர்ன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையை கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் பெட்டிங்ஹாம் - ருவான் டி ஸ்வார்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பெட்டிங்ஹாம் 39 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.