
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ருவான் டி ஸ்வார்ட் 55 ரன்களுடனூம், ஷான் வான் பெர்க் 34 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வான் பெர்க் 38 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்வார்ட்டும் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர்.