நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்கு முன் மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது.
மழை நின்ற பின் தொடங்கிய 37 ஓவர்களாக குறைப்பட்டு டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சாப்மேன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்தனர். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் மார்க் சாப்மேன் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திராவும் 79 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய டாம் லேதம் ஒரு ரன்னிலும், கிளென் பிலீப்ஸ் 22 ரன்னிலும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 20 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.