
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலனது அணிக்கு டாம் லேதம் - டெவான் கான்வே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே அரைசதம் கடக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் லேதம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேன் வில்லியம்சன் - ஹென்றி நிக்கோலஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல்நாள் ஆட்டம் விரைவாக முடிக்கப்பட்டது.