
நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இலங்கை அணி. முதல் டெஸ்ட் போட்டியில் பரபரப்பு உச்சத்தை பெற்று, கடைசியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரது இரட்டைச் சதத்தின் மூலம் 580 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது டிக்ளர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 164 ரன்கள் ஆல் அவுட் ஆனது. கேப்டன் கருணரத்னே மட்டுமே 89 ரன்கள் அடித்திருந்தார். பாலோவ் ஆன் கொடுக்கப்பட்டு, இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் செய்தது இலங்கை அணி. மூன்றாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் அடித்திருந்தது. 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.
4ம் நாள் ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு இன்று போராடியது. குஷால் மண்டிஸ் 50 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 114 ரன்கள் இழந்திருந்த போது, ஐந்தாவது விக்கெட்டுக்கு சந்திமால் மற்றும் தனஞ்செயா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது. சந்திமால் 62 ரன்களுக்கு அவுட் ஆனார்.