
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது.. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 02) நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய குசால் பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 17 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதனையடுத்து குசால் பெரேராவுடன் இணைந்த கேப்டன் சரித் அசலங்காவும் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசி ஸ்ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த குசால் பெரேரா 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிக்ஸர்களை விளாசித்தள்ளிய கேப்டன் சரித் அசலங்கா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 24 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.