
ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 29ஆம் தேதியன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் ஆசிய சாம்பியன் இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதின. புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் போராடி 167/7 ரன்கள் சேர்த்தது.
இப்போட்டியில் 15/3 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற நியூசிலாந்துக்கு கிளென் பிலிப்ஸ் உடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெயருக்காக விளையாடிய டார்ல் மிட்சேல் 22 (24) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கிளன் பிலிப்ஸ் நேரம் செல்லசெல்ல அதிரடியை அதிகப்படுத்தி 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 104 (64) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் வாயிலாக டி20 உலக கோப்பையில் பிரண்டன் மெக்கல்லமுக்கு பின் சதமடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அதை தொடர்ந்து 168 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிஷாங்கா 0, குசன் மெண்டிஸ் 4, டீ சில்வா 0, அஸலங்கா 4, கருணரத்னே 3 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 24/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் பானுக்கா ராஜபக்சா அதிரடியாக 34 (22) ரன்களும் கேப்டன் சனாக்கா 35 (32) ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள். இறுதியில் 19.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை வெறும் 102 ரன்களுக்கு சுருண்டு நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை குறைத்துக் கொண்டது.