
கடந்த மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றை கடந்து நாக்-அவுட் போட்டிகளையும் தாண்டியுள்ள ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதியான இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் புதிய அணியாக இருந்தாலும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.
அந்த அணியில் உள்ள ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், சுப்மன் கில், டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர தரமான வீரர்கள் இந்த இறுதிப் போட்டியில் கடைசி முறையாக மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை முத்தமிட போராட உள்ளனர்.