உலகக்கோப்பை 2023: வரைவு பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வரைவு பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் வரைவு போட்டி அட்டவணையை பிசிசிஐ ஐசிசி-க்கு அனுப்பியுள்ளது.
அந்த வரைவு போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trending
அதேபோல் அகமதாபாத்தில் தற்போதைய சாம்பியன் இங்கிலாந்து நியூசிலாந்தை தொடக்க ஆட்டத்தில் எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இறுதிப் போட்டியும் அங்கே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்தியா தனது லீக் போட்டிகளை கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 9 மைதானங்களில் விளையாடும். பாகிஸ்தான் ஐந்து நகரங்களில் விளையாடும்.
இந்த வரைவு பட்டியல் உலகக்கோப்பையில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அடுத்த வாரம் இறுதி அட்டவணை வெளியிடப்படும். அகமதாபாத்தில் விளையாட பாகிஸ்தான் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now