
இந்தியா நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கொல்கத்தா, புனே, சென்னை, அகமதாபாத், டெல்லி, தர்மசாலா, பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத், மும்பை என்று 10 மைதானங்களில் நடக்கிறது. இது தவிர கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மைதானங்களில் பயிற்சி போட்டிகள் நடக்கிறது.
இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் மூலமாக இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த தகுதி பெற்றன. ஒவ்வொரு மைதானத்திலும் 5 போட்டிகள் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உலகக் கோப்பை 2023 முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதையடுத்து 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது.