
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016ஆம் ஆண்டில் நடந்த இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது.
இந்நிலையில் 7ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3ஆவது அலை வரலாம் என்ற பேச்சு கிளம்பியதாலும் இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.
அதன்படி 16 அணிகள் இடையிலான 7ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.