
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. வரும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் இத்தொடருடன் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை வாங்கிக் கொடுத்த டேவிட் வார்னர் இப்படி ஹீரோவை போல விடை பெறுவதற்கு அனுமதி கொடுத்தது ஏன் என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதற்கு உஸ்மான் கவாஜா முதல் மைக்கேல் கிளார்க் வரை நிறைய முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். எனவே இருவரையும் ஒன்றாக ஒரே அறையில் அமர வைத்து சமரசம் பேசினால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.