
இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான தினேஷ் கார்த்திக் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். தோனி போன்ற மாபெரும் வீரர் இந்திய அணியில் விளையாடியது காரணமாக அணியில் உள்ளேயும், வெளியேயும் இருந்த தினேஷ் கார்த்திக் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனாலும் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட தினேஷ் கார்த்திக்கின் கெரியர் முடிந்துவிட்டது என்று அனைவரும் கூறி வந்தனர்.
ஆனால் பெங்களூரு அணிக்காக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஒரு ஃபினிஷராக அசத்திய தினேஷ் கார்த்திக் அதனை தொடர்ந்து தற்போது இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையிலும், இம்மாதம் துவங்க இருக்கும் ஆசிய கோப்பையிலும் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்பது உறுதியாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் தான் விளையாடுவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில், “ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் உயர் மட்டத்தில் விளையாடும் போது மட்டுமே அழுத்தத்தை சந்திக்க முடியும். அவ்வாறு அழுத்தத்தை சந்தித்து விளையாடுவது ஒரு பாக்கியம் மக்கள் என்னிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அதனால் நானும் அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன்.