
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 12ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கனிகா அஹுஜா 33 ரன்களையும், ராக்வி பிஸ்ட் 22 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் டியான்டிரா டோட்டி மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் ஹேமலதா 11 ரன்னிலும் பெத் மூனி 17 ரன்னிலும், ஹர்லீன் தியோல் 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் இணைந்த ஆஷ்லே கார்ட்னர் - போப் லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லிட்ச்ஃபீல்ட் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.