
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி கடந்த இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு துவக்கத்திலிருந்தே ரன்மழை பொழிந்தது. குறிப்பாக விக்கெட் இழப்பின்றி அந்த அணி 100 ரன்களை கடந்த வேளையில் முதல் விக்கெட்டாக 21.4-ஆவது ஓவரில் அணியின் எண்ணிக்கை 125ஆக இருந்தபோது பதும் நிஷங்கா 61 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் 26.2-ஓவரில் அணியின் எண்ணிக்கை 157-ஆக இருந்தபோது 78 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி 157 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் நிச்சயம் இலங்கை அணி 300 ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்த 52 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை அந்த அணி இழந்து பரிதாப நிலையை சந்தித்தது.