
WI vs AUS, 1st Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று(ஜூன் 25) பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையிலும் ஷமார் ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற ஜோஷ் இங்கிலிஸும் 5 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் கவாஜாவுடன் இணைந்த டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் கவாஜா 47 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஆகியோரும் சோபிக்க தவறினர். மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் கடந்திருந்த டிராவிஸ் ஹெட் 78 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.